North

தமிழ் நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல் – 4 ஆம் திகதி மிகப் பெரும் கண்டனப் போராட்டம்!

தமிழ் நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல், அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4ஆம் திகதி பெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (செப்ரெம்பர் 29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவிகளைத் துறந்து வெளிநாடு பயணமாகியுள்ளார்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்குகொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளில் சிலர்.
யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்குகொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளில் சிலர்.

குருந்தூர்மலை விகாரை தொடர்பான நீதிமன்றக் கட்டளையை மாற்றும்படி சட்டமா அதிபரால் நேரில் அழைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று ரி.சரவணராஜா தனது பதவி விலகல் காரணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாட்டின் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாகச் சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது.

இந்தநிலையில் தமிழ் நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களைக் கண்டித்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் வரையில் போராட்டம் நடத்துவது என்று இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்

Related Posts