முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று கூறப்படுவது பாரதூரமானது. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை.
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தனது நீதிபதிப் பதவிகளில் இருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர்மலை வழக்கு விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜாவைத் தனிப்படத் தாக்கி உரையாற்றியிருந்தார்.
நீதிபதி தனது பதவி விலகல் காரணங்களில் நாடாளுமன்றத்திலும், வெளியேயும் தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டை நீதிபதி முன்வைத்துள்ளாரா என்பதும் பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது. நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்படாடு அளிக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தேன் என்று என் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்த நான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் தலையிடவும் இல்லை என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இது பாரதூரமானது. நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் பாதுகாப்புத்துறை மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதை அலட்சியப்படுத்த முடியாது என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நீதிபதி குறிப்பிட்டுள்ள விடயங்கள் பாரதூரமானவை. இந்த விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நீதி அமைச்சருடன் பேச்சில் ஈடுபடுவேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.