முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவித்துப் பதவி விலகியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பின்பேரில் ஆரம்பித்துள்ளன என்று கூறப்படுகின்றது.
இந்த விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நீதித்துறை, சட்டம் மற்றும் பாதுகாப்பு துறையின் பிரதானிகளுடன் பேச்சு நடத்தி பதவி விலகலுக்கான காரணங்களை கண்டறிந்து அறிக்கையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த சம்பவம் தொடர்பான நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
நீதிபதி சரவணராஜா, சட்டமா அதிபர் சம்பந்தமாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி செயலாளர், சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜாவை பிரதிவாதியாக குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாக வேண்டும் என்று நீதி சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக விடுத்த அழைப்புக்கு அமைய தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அவருடன் கலந்துரையாடல் நடைபெற்றது என்று சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூன்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் முன்னிலையில், முல்லைத்தீவு நீதிபதியுடன் சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது என்றும், நீதவான் ஒருவரைப் பிரதிவாதியாக பெயரிடுவது தவறானது என அறிவிப்பது தொடர்பாக பேசப்பட்டது என்றும் சட்டமா அதிபர் ஜனாதிபதியின் செயலாளரிடம் கூறியுள்ளார்.
குருந்தூர்மலையில் விகாரை அமைக்கப்பட்டமை தொடர்பில் தன்னால் வழங்கப்பட்ட கட்டளையை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று ரி.சரவணராஜா தெரிவித்திருந்தார். அது தொடர்பாக சட்டமா அதிபரின் கருத்து வெளியாகவில்லை.
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மட்டத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவியை இலங்கை அரசாங்கம் எதிர்பார்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நீதிபதியின் பதவி விலகல் அதிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.