வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இலங்கை மக்கள் மத்தியில் கடுமையான சமூக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ‘2023- செப்ரெம்பர் பொது நிர்வாகப் பகுப்பாய்பு மதிப்பீட்டு அறிக்கை’யில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தலில் தற்காலிக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும், மக்கள் மத்தியில் விரக்தி நிலைமை உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகின்றது.
எரிசக்தித் துறையில் வரித் திருத்தங்கள், அரச செலவை ஈடு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட விலை நிர்ணயம், நிலுவைத் தொகை நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்பன மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகின்றது.
அத்தியாவசியப் பொருள்களுக்கான தொடர்ச்சியான தட்டுப்பாடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள், தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை பொதுமக்களின் அதிருப்திக்குப் பிரதான காரணங்களாக இருக்கின்றன என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
நாட்டில் ஊழலைக் குறைப்பதில் தெளிவான முன்னேற்றம் இன்மையும் பொதுமக்களின் அதிருப்திக்கு பிரதான காரணியாக இருக்கின்றது.
கடந்த கால முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் அதற்கான தண்டனை அனுபவிக்காமல், பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றமை பொதுமக்கள் அவதானிக்கும் பிரதான விடயமாக இருக்கின்றது என்று சர்வதேச நாணய நிதியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற பலவீனமான பொறுப்புக்கூறல் நிறுவனங்களால் ஊழல் அபாயம் அதிகரித்துள்ளது என்றும், இந்த நிறுவனங்களுக்குத் தங்கள் பணிகளை வெற்றிகரமான நிறைவேற்றும் அதிகாரமோ, தகுதியோ இல்லை என்றும் சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.