முல்லைத்தீவு மாவட் நீதவான் நீதிமன்ற நீதிபரி ரி.சரணவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பான அறிவித்தலை முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.
இன்று (ஒக்ரோபர் 1) முதல் காலவரையறை இன்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகள் சங்கம் நாளை (ஒக்ரோபர் 2) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற முன்றலில் கண்டனப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 23ஆம் திகதி தான் வகித்த நீதிபதிப் பதவிகள் அனைத்தில் இருந்தும் விலகியிருந்தார்.
குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பான வழக்கில் தனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி விலகுகின்றேன் என்று அவர் கூறியிருந்தார்.
தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.