ஜேர்மனியின் Deutsche Welle ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குச் சாத்தியமே இல்லை என்று தெரிவித்தார்.
நேர்காணலில் நெறியாளர் கேள்விகளைக் கேட்டபோது, அவற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மோதல் போக்கைக் கைக்கொண்டார்.
சனல் – 4 வெளியிட்டுள்ள காணொலி தொடர்பாக நெறியாளர் கேட்டபோது, “நீங்கள் ஏன் சனல் – 4 ஊடகத்தைப் புனிதமாகக் கருதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய ரணில் விக்கிரமசிங்க, அந்த விடயத்தைத் திசை திருப்ப முற்பட்டார்.
சனல்-4 தெரிவித்த விடயங்கள் தொடர்பில் குழுவொன்றை நியமித்துள்ளேன். ஓய்வுபெற்ற நீதிபதி அதன் தலைவராக இருக்கின்றார். முன்னாள் விமானப்படைத் தளபதி, நன்கறியப்பட்ட சட்டத்தரணி ஆகியோர் அந்தக் குழுவில் இருக்கின்றனர் என்றார்.
அந்த ஆணைக்குழு எதையாவது செய்வதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளது என்று எவரும் கருதவில்லையே என்று நெறியாளர் கேட்டபோது, அது உங்களின் கருத்து எனது கருத்தல்ல என்றார் ரணில் விக்கிரமசிங்க.
நெறியாளர் கேள்விகளை கேட்க முயன்றபோது, ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி குறுக்கிடுகின்றார்.
என்னைக் கேள்வி கேட்க விடுங்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். ஆனால் முதலில் கேள்வி கேட்க விடுங்கள் என்கிறார் நெறியாளர்.
நான் உங்களுக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளேன். நான் தொலைக்காட்சிகளை நடத்தியுள்ளேன், ஊடகங்களை கையாண்டுள்ளேன் என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.