மனிதர்களை நடைப்பிணங்களாக மாற்றும் “சோம்பி ட்ரக்ஸ்” என்ற போதைப் பொருள் இலங்கைக்குள் பரவியுள்ளது என்றும், அது ஹெரோயின் போதைப் பொருளை விட 50 மடங்கு ஆபத்தானது எனவும் போதை பழக்கத்தில் விடுப்பட சிகிச்சையளிக்கும் மருத்துவர் விராஜ் பெரேரா எச்சரித்துள்ளார்.
சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“சோம்பி ட்ரக்ஸ்” என்பது விலங்குகளை மயக்கமடைய செய்ய பயன்படுத்தும் மருந்து. இதை அதிக செரிவில் போதைப் பொருளாகப் பயன்படுத்தும் நபரின் மூளை செயற்திறனை இழக்கும். இறந்த உடலுக்கு உயிர் வந்தது போல இருக்கும்.
“சோம்பி ட்ரக்ஸ்” பாவனையால், குறுகிய காலத்திலயே உடல் தசைகளை சிதைத்து விடும். பெரிய பெரிய புண்கள் உடலில் ஏற்படும். காலப்போக்கில் தசை நார்கள் பலமிழந்து, உடல் இயக்கம் தடைப்பட்டு, சமநிலை இல்லாமல் போகும். தள்ளாடிய நடை வரும்.
அமெரிக்காவில் சில மாநிலங்களில் உள்ள நகரங்களில் சோம்பி நிலையில் பலர் இருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சோம்பி நிலையில் இருப்பவர் தனக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிய மாட்டார். சோம்பி நிலைக்கு மாறும் நபர்கள் சில நேரம் வன்முறையாக நடந்துக்கொள்வர்கள். அவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள்.
இந்த சோம்பி ட்ரக்ஸ் என்ற போதைப் பொருளை பயன்படுத்தினார் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இலங்கையில் எந்த அளவுக்கு இந்த போதைப் பொருள் பரவியுள்ளது என்பது தெரியாது. சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
நாட்டை ஆட்சி செய்பவர்கள், சட்டத்தை பாதுகாப்பவர்கள் போதைப் பொருள் மூலம் நன்மைகளை பெற்று வருவதால், போதைப் பொருளை ஒழிக்கும் தீர்வுகளை முன்வைக்க அக்கறை காட்டுவதில்லை எனவும் மருத்துவர் விராஜ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.