கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நிதி இல்லை என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலம் கைவிரித்துள்ளது என்று அகழ்வுப் பணிக்குழு தெரிவித்துள்ளது.
கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட இடத்தில் 9 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் 17 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அகழ்வுப் பணிகள் ஒக்ரோபர் மாதம் இறுதிவாரம் வரையில் முன்னெடுக்கப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தபோதும், கடந்த 15ஆம் திகதியுடன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
தற்போது அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நிதி இல்லை என்று மாவட்டச் செயலகம் கைவிரித்துள்ளது என்று அகழ்வுப் பணிக்குழு தெரிவித்தது. அகழ்வு முன்னெடுக்கப்படும் பகுதியை மழை காலத்தில் பாதுகாப்பதற்குரிய கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தநிலையில் மாவட்டச் செயலகக் கணக்காய்வுப் பிரிவு அதற்கான நிதி இல்லை என்று அறிவித்துள்ளது என்றும் அகழ்வுப் பணிக்குழு தெரிவித்தது.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் உமாமகேஸ்வரனிடம் கேட்டபோது:-
மாவட்டச் செயலகத்தால் உடனடியாக நிதியை விடுவிக்க முடியாது. அவற்றுக்குரிய நடைமுறைகளுக்கு அமையவே நிதியை விடுவிக்க முடியும் .கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்காக நிதியமைச்சு 57 லட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தது. அதற்கான கடிதம் கிடைத்தபோதும் இன்னமும் நிதி கிடைக்கவில்லை.
அவசர தேவை கருதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நெற்கொள்வனவுக்காக வைத்திருந்த நிதியில் இருந்து அகழ்வுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. சுமார் 20 இலட்சம் ரூபாவரையில் மாவட்டச் செயலகத்தால் நிதி வழங்கப்பட்டது.
தற்போது இரண்டாம் கட்டத் தேவைகளுக்காக நிதி கோரப்பட்டுள்ளது. நடைமுறைகளுக்கு அமையவே நிதியை வழங்க முடியும். இது தொடர்பாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டு திறைசேரிக்குழுவுக்கு அது அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைப்பதற்கு குறைந்தது 4 நாள்களுக்கு மேல் தேவைப்படும்.
மாவட்டச் செயலகத்தால் நெற்கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது உடனடியாக நிதி வழங்க முடியாதுள்ளது
என்று குறிப்பிட்டார்.
இந்த அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்து ரி.சரவணராஜா தனது நீதிபதிப் பதவிகளைத் துறந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளுக்கு நிதி தாமதப்படுத்தப்படுகின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தை இது தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.