பொமேரியன் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு இருவர் உரிமை கோரியதை அடுத்து மரபணுப் பரிசோதனை செய்ய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சுவாரசிய சம்பவம் கிளிநொச்சியில் நடந்துள்ளது. தங்களது வளர்ப்பு நாயைக் கடத்தி வைத்துள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அயல் குடியிருப்பாளர் ஒருவர் வளர்ப்பு நாயைக் கடத்திக் கட்டி வைத்துப் பராமரிக்கின்றனர் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்பில் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய நாயைக் குற்றஞ்சாட்டப்பட்டவரே வளர்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் அயல் வீட்டில் உள்ள அதே இன நாயுடன் இனவிருத்திக்காக நாய் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வளர்ப்பு நாயைக் காணவில்லை. இந்தநிலையில் சில நாள்களுக்கு முன்னர் அவரது நாய் வீடு வந்துள்ளது.
இது தொடர்பாக ஆராய்ந்தபோது, அயல் குடியிருப்பாளர் அந்த நாயை வேறு ஓர் இடத்தில் வசிக்கும் தனது வீட்டுக்குக் கொண்டு சென்று வளர்த்துள்ளார். அவரது மகள் தூரப் பயணம் செய்வதால் நாயை சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்.
அதன்பின்னரே நாய் தன்னை வளர்த்தவர் வீட்டுக்கு வந்துள்ளார். அயலவர் தற்போது அது தனது நாய் என்று உரிமை கோருகின்றார். இந்த நாயின் பரம்பரையுள்ள பெண் நாய் ஒன்று உள்ளது. அதன் மரபணுவை இந்த நாயின் மரபணுவுடன் ஒப்பிட்டுப் பரிசோதனை செய்து கட்டளையாக்க வேண்டும் என்று சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் தெரிவித்தார்.
இவற்றை ஆராய்ந்த நீதிமன்றம் கிளிநொச்சி மாவட்ட விலங்கியல் மருத்துவ அதிகாரி ஊடாக இரு நாய்களது மரபணுக்களையும் ஆராய்ந்து நீதிமன்றில் அறிக்கையிட வேண்டும் என்று கட்டளையிட்டது.