News

பொருள்களின் விலைகள் இன்னமும் அதிகரிக்கும் – இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

நாட்டில் பொருள்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருள்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ஆய்வு ஒக்ரோபர் மாதத்துக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்குச் சமாந்தரமாக நடைபெறும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார்.

கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா, பரிஸ் கிளப், சீனா ஆகியன பெரும் ஆதரவை வழங்குகின்றன என்று குறிப்பிட்ட அவர், சில விடயங்களில் தீர்வைக் கண்டதும் சர்வதேச நாணய நிதிய பணியாளர் மட்ட உடன்பாடு சாத்தியமாகலாம் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, அடுத்துவரும் மாதங்களில் பொருள்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்று அரசாங்க உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதால் சில வரி அதிகரிப்புக்களும், புதிய வரிகளும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரிகின்றது.

Related Posts