வீதியோரம் பஸ்ஸூக்காகக் காத்திருந்த மூதாட்டியைக் கடத்திச் சென்று நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் ஓமந்தையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (ஒக்ரோபர் 5) மாலை நடந்துள்ளது. கடத்தல் சம்பவத்தை அடுத்துப் பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூநகரி, செல்விபுரத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர முட்கொம்பனில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்து வீடு திரும்புவதற்காக நேற்று மாலை முட்கொம்பன் பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தார்.
அங்கு காரில் வந்த மூவர் தங்களுடன் வர விரும்பினால் வாருங்கள் என்றும், தாங்களும் அந்த வழியாகவே செல்கின்றோம் என்று கூறியுள்ளனர். காருக்குள் இரு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்த நிலையில் மூதாட்டியும் நம்பிக் காரில் ஏறியுள்ளார்.
கார் சிறிது தூரம் சென்றதும் மூதாட்டியை அச்சுறுத்தி வாயையும், கைகளையும் கட்டியுள்ளனர் காரில் இருந்தவர்கள். மூதாட்டி வைத்திருந்த 10 ஆயிரம் ரூபா பணம், அணிந்திருந்த நகைகள் என்பவற்றை கொள்ளையிட்ட பின்னர் முட்கொம்பன் சுடலைக்கு அருகில் மூதாட்டியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் வீதியோரம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் பூநகரிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவத்தை அறிந்த பொலிஸார் விரைவாகச் செயற்பட்டு மாகாணத்தை விட்டு வெளியேறும் வாயில்களில் சோதனையைத் தீவிரப்படுத்தினர்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஓமந்தையைக் கடக்க முயன்றபோது பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. அப்போது காரில் இருவர் மட்டும் இருந்தனர். பெண்ணைக் காணவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது பூநகரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மூதாட்டியிடம் இருந்து கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 7 லட்சத்து 45 ஆயிரம் ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் மல்லாவியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர்.