யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவின் நாகபட்டினத்துக்கும் இடையே நாளை ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளைக் கையாளும் விடயத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப ரீதியான தடங்கல் காரணமாக இந்தப் பயணிகள் கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்தப் பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாகபட்டினத்தில் இருந்து நேற்று இந்தக் கப்பல் (செரியாபாணி) பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்டு காங்கேசன்துறைக்கு வந்திருந்தது.
நேற்றுக் காலை 11 மணியளவில் நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் பிற்பகல் 1.15 மணியளவில் காங்கேசன்துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் பணியாற்றும் 14 பேர் அதில் பயணித்தனர்.
இரு வழிக் கட்டணமாக 53 ஆயிரத்து 500 ரூபாவும், ஒருவழிக் கட்டணமாக 27 ஆயிரம் ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கிப் பயணிகள் கப்பல் சேவை நடைபெறும் நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.