இணையம் ஊடாக உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இலங்கைக் கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு எச்சரித்துள்ளது.
இணையத்தளம் ஊடாக உடனடியாகக் கடன் வழங்குவோருக்குத் தனிப்பட்ட விவரங்களைப் பொதுமக்கள் வழங்கக் கூடாது என்றும் கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, “இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பாகக் கடந்த மாதங்களில் 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் வங்கிகளை விடவும் குறைவான வட்டி விகிதங்களை இவை வழங்குகின்றன. குறைந்தளவு ஆவணங்களே கோரப்படுவதால் மக்கள் இந்தக் கடன் மோசடிக்குள் சிக்கிக்கொள்கின்றனர். 5 ஆயிரம் ரூபா முதல் 10 லட்சம் ரூபாவரை குறைந்த வட்டியுடன் கடன் வழங்கப்படுகின்றது.
இந்த நிறுவனங்கள், தாம் வழங்கும் இணைப்பு மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களை வற்புறுத்துகின்றன. கைத்தொலைபேசியில் தங்களின் செயலியைப் பதிவிறக்கிக்கொள்ளவும் அறிவுறுத்துகின்றன.
அந்தச் செயலி பயநருடைய கோப்புக்கள், தொடர்பு எண்கள், அழைப்புப் பதிவுகள் போன்றவற்றை அணுக அனுமதி கோரும். பயநர்கள் அனுமதி வழங்கியவுடன் அந்தத் தகவல்களைச் செயலி திரட்டிக் கொள்ளும். அதன்பின்னர் கடன் வசூலிப்பின்போது அவற்றைக் கொண்டு பயநர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றது.
பயநரின் கைபேசியில் உள்ள தொடர்பு எண்களையும் அந்த நிறுவனம் தொடர்பு கொள்வதுடன், கடன் பெற்றவர் தொடர்பான அவநூறுகளைப் பரப்பும். கடனைச் செலுத்தும்வரை பயநர்களைத் தொந்தரவு செய்வதுடன், அவர்களை சங்கடப்படுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டும்.
எனவே இணையம் ஊடான கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்பதுடன், இவ்வாறான செயலிகளைத் தங்கள் கைபேசிகளில் மக்கள் பதிவிறக்கிக் கொள்ளவும் வேண்டாம். இவ்வாறான செயலிகளை பதிவிறக்கியிருந்தால் அவற்றை நீக்குவது மட்டும் போதுமானதல்ல. கைபேசியை முழுமையாக மீட்டமைக்க (reset) வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தரவுகளை அணுகுவதைத் தடுக்க முடியும்.
தேசிய அடையாள அட்டைகள், கடவுச் சீட்டு நகல்கள், பிறப்புச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) போன்ற முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதி அல்லது வங்கி விவரங்களை தெரியாத நபர்களுடன் மக்கள் பகிரக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியாவில் நடக்கும் இவ்வாறான மோசடிகள் தொடர்பாக சர்வதேச ஊடகமான பி.பி.சி. புலனாய்வு செய்துள்ளது. மக்களை உடனடிக் கடன் செயலி வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டியும் அவமானப்படுத்தியும் பணம் பறிக்கும் ஒரு பெரிய மோசடி நடந்து வருகிறது. இந்தச் செயலிகளுக்காக பணியாற்றும் கடன் வசூலிப்பு முகவர்களின் துன்புறுத்தலால், இதுவரை குறைந்தது 60 இந்தியர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று பி.பி.சி. கூறுகின்றது.