North

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் இழுத்தடிக்கப்படும் அறிக்கைகள் – விடுக்கப்பட்ட கோரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட விடயத்தில் சிலரைச் சந்தேகநபர்களாகப் பெயரிட வேண்டும் என்று சிறுமி சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படாது தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதால், சந்தேகநபர்களாகச் சிலர் குறிப்பிடப்படும் பட்சத்தில் வழக்கு விசாரணைகள் துரிதமாக முன்னகரும் என்று அவர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா வழக்கை அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் இடதுகை மணிக்கட்டுக்குக் கீழ் அகற்றப்பட்டது. விடுதியில் கடமையில் இருந்தவர்களின் கவனவீனமே இதற்குக் காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

நேற்று (ஒக்ரோபர் 11) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அகற்றப்பட்ட கை தொடர்பான மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

சிறுமி சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த வழக்கை முன்னோக்கிக் கொண்டு செல்ல வசதியாக சிலரைச் சந்தேகநபர்களாக பெயரிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சிலரைச் சந்தேகநபர்களாகக் குறிப்பிடுவதன் ஊடாக இந்த வழக்கை விரைவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

அறிக்கைகளை விரைவாக நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன் மற்றும் லக்சன் செல்வராஜா ஆகியோர் முன்னிலையாகினர்.

Related Posts