வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலுமு் அடுத்த சில நாள்களுக்குப் பரவலாக மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வங்காள வரிகுடாவிலும், அரபிக் கடலிலும் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சிகள் காரணமாகவே வடக்கில் மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி தாழமுக்கம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது வடக்கு மாகாணத்துக்கு அண்மித்திருப்பதால் அடுத்த சில நாள்களுக்கு மேகமூட்டமாகவும், மிதமான மழை கிடைக்கும் என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான வடகீழ்ப் பருவமழை இந்தத் தாழமுக்கத்துடன் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தின் இரு திசைக் கடற்பரப்புக்களில் ஒரே நேரத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளமை அசாதாரண நிகழ்வாகும். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
இந்த இரண்டு தாழமுக்கங்களினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காவிட்டால் இந்த ஆண்டுக்கான வடகீழ்ப் பருவ மழை தொடங்குவதற்குத் தாமதமாகலாம்.
ஏனெனில், பருவ மழை கிடைப்பதற்கான ஈரப்பதன் முழுவதையும் இவை உள்ளெடுத்து விடும் என்பதனால் இந்தத் தாழமுக்கங்களுக்குப் பின்னர் மழை கிடைப்பதற்கு குறைந்தது ஒரு வாரமாவது எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.