Politics

புலிகளின் வால்தான் இல்லை, தலை இன்னமும் இருக்கின்றது – பரபரப்பை கிளப்பும் சரத் வீரசேகர!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலைத்தான் அழித்துள்ளோம். தலை இன்னமும் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்று (ஒக்ரோபர் 12) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

தோட்டாக்களால் பெற்றுக்கொள்ள முடியாத தமிழீழத்தைத் தற்போது 13இன் ஊடாகப் பெற்றுக்கொள்வதே சிலரின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை நாங்கள் அழித்துள்ளபோதும், அதன் தலையும் ஏனைய பகுதிகளும் ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புக்கள் இன்னமும் தங்களின் தமிழீழக் கனவைக் கைவிடவில்லை. அதனால்தான் நாம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டோம் என்று ஜெனிவாவில் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த புராதனச் சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளில் அவர்களே ஈடுபடுகின்றனர். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக ஒழித்தாலும் தமிழீழக் கனவு இன்னமும் இருக்கின்றது. அச்சுறுத்தலான சூழல் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைதூக்குகின்றது என்று இந்தியாவில் இருந்து எமக்குப் புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாகப் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் கூறினார்.

அரசாங்கத் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக்களால் பிரபலமானவர். முல்லைத்தீவு நீதிபதி அச்சுறுத்தலுக்குள்ளான விடயத்திலும் சுட்டிக்காட்டப்படுபவர்.

Related Posts