யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மருத்துவமனைக்கு வந்த ஒருவரைத் தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ள நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது.
வீடியோவில் உள்ள சம்பவம் இன்று (ஒக்ரோபர் 14) நடந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் ஒருவரைக் கீழே தள்ளி கால்களாலும், கைகளாலும் சரமாரியாகத் தாக்குகின்றனர்.
மருத்துவமனையின் வாயிலில் இந்தச் சம்பம் நடைபெற்ற நிலையில் வீதியில் ஓடிச் சென்று தாக்குபவர்களைத் தடுக்கின்றனர். இந்தக் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும், தாக்கப்பட்டவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதையில் வந்தமையாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் காரணம் கூறப்படுகின்றது. ஆனால் அந்த நபர் மதுபோதையில் இருக்கவில்லை என்று சம்பவ இடத்தில் நின்றவர்கள் கூறுகின்றனர்.
பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தாக்கப்பட்டவருடன் சமரசமாகியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, சம்பவத்தில் தொடர்புடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களையும், அவர்களைப் பார்வையிட வருவோரையும் மரியாதை குறைவாக நடத்துவதுடன், சண்டித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர் என்பது மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.