ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடத்தை பாடசாலை நேரத்துக்கு அப்பால் அல்லது வார இறுதி நாள்களில் கட்டண அடிப்படையில் கற்பிப்பதைத் தடை செய்யும் சுற்றறிக்கை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மாகாணச் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை மேலதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பெற்றோர் முறைப்பாடு செய்ய மாகாண கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும், அல்லது 026 7500 500 என்ற இலக்கத்தின் ஊடாக கிழக்கு ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.