யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் மருத்துவமனைக்கு வந்த ஒருவரைத் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் பணி நிறுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் (எல்.ஆர்.டி.சி) கொழும்புத் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஒக்ரோபர் 16) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் எல்.ஆர்.டி.சி. நிறுவனத்துக்கு அறிவுறுத்தல்கள் சில வழங்கப்பட்டுள்ளன என்று போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
எல்.ஆர்.டி.சி. பாதுகாப்புச் சேவைக்கு ஆள்சேர்ப்புச் செய்யும்பொது வெளிப்படைத்தன்மை பேணப்படுவதுடன் உரிய தகைமை உடையவர்களை ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டும்.
பாதுகாப்புச் சேவையில் சேர்க்கப்படுபவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
எல்.ஆர்.டி.சி. பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பு உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
பொறுப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலை நிர்வாகத்துடன் சுமூகமான உறவைப் பேணுபவராக இருக்க வேண்டும்.
பிரச்சினைகளில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
காலாண்டுக்கு ஒருமுறை உயர்மட்ட அதிகாரிகள் வந்து பாதுகாப்புச் சேவை மேம்பாடு தொடர்பாக நிர்வாகத்துடன் கலந்துரையாட வேண்டும்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
என்ற விடயங்கள் இந்தச் சந்திப்பில் எல்.ஆர்.டி.சி. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றும் மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்தார்.