North

லியோவும் ஆறு தமிழ் அரசியல் கட்சிகளும் – கடிதங்களால் நடந்த கூத்து!

தென்னிந்திய சினிமா நடிகர் விஜய்க்கு தமிழ் அரசியல் கட்சிகள் எழுத்திய கடிதம் என்று ஒரு கடிதம் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தக் கடிதத்துக்கு தமிழக முன்னணி ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்க இந்த விடயம் பெரும் பேசு பொருளாகியது.இந்தக் கடிதம் தங்களால் வெளியிடப்படவில்லை என்று இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு நடத்தி மறுத்துள்ளன தமிழ் அரசியல் கட்சிகள்.

எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.

லியோ திரைப்படம் வெளியானால் ஹர்த்தால் போராட்டத்துக்கு பங்கம் ஏற்படும் என்றும், அதனால் திரைப்படத்தை அன்று வெளியிடக் கூடாது என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

இங்குள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்து விடயங்களுக்கும் கடிதங்களையே அனுப்புவதால் அனைவரும் அந்தக் கடிதம் தமிழ் அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்டிருக்கும் என்று இலகுவில் நம்பிக்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்வு ஒன்றை நிறுத்த வேண்டும் என்று அண்மையில் தமிழ் அரசியல் கட்சி ஒன்று எழுதியிருந்த கடிதமும் இந்த நம்பிக்கைக்குக் காரணம்.

அதையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பலரும் ஈழத் தமிழர்களையும், இங்குள்ள அரசியல் கட்சிகளையும் வசைபாடினர். கடிதத்தை அனுப்பியோர் தமிழ் மக்களை மலினப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர் என்றும் திட்டித் தீர்த்தனர். தமிழகத்தின் முன்னணி ஊடகங்களும் இந்தக் கடிதத்தைத் தங்கள் தளங்களில், சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தன.

அதையடுத்து யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கட்சித் தலைவர்களின் கையெழுத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலியான கடிதம் அது என்று கூறினார். தாம் இவ்வாறான எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதுமகன் ஒருவர், இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கடிதம் எழுதுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கின்றனர். அதைப்பயன்படுத்தி எவரோ பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். இனியாவது கடிதங்களை எழுதிக் குவிக்காது ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் தமிழ்க் கட்சித் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

 

Related Posts