நாளை ஹர்த்தாலா? – பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம்!

Yarl Naatham

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களைக் கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை வலியுறுத்தியும் நாளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தால் போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பொதுமக்களும், பெற்றோரும், மாணவர்களும் போராட்டத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளை நடைபெறவிருக்கும் பாடசாலைப் பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கல்வித் திணைக்கள அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று தமிழ் அரசியக் கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்தனர்..

7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளபோதும், நாளைய ஹர்த்தால் தொடர்பில் பொதுமக்களிடையே பெரும் குழப்ப நிலைமை காணப்படுகின்றது.

7 அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டத்துக்கான அழைப்பு விடுத்துள்ளபோதும், ஏனைய தரப்புக்கள் இது தொடர்பில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதில் பின்னடிக்கின்றமையே மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று வர்த்தகர்கள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர். ஆயினும் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் தங்கள் நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கவில்லை. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் இது தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடவில்லை என்று தெரிகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஹர்த்தால் தொடர்பாக கள்ள மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றது. ஹர்த்தால் தொடர்பாக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை அறிய முயன்றபோதும் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

சர்வதேச விவகாரங்களுக்குக் கூட அறிக்கைகளை வெளியிடும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் இந்த விடயத்தில் அறிக்கைதானும் வெளியிடாதுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தமும், சீருடைத் தரப்பினரின் அழுத்தமுமே பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் மௌனத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றபோதும், அதை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளை, நாளை பாடசாலைகளில் மாகாண மட்டப் பரீட்சைகள் நடைபெறும் நிலையில் ஹர்த்தால் தொடர்பாக மாணவர்களிடையேயும், பெற்றோர் இடையேயும் குழம்பம் ஏற்பட்டுள்ளது.

நாளை பாடசாலை நடைபெறுமா? பரீட்சை நடைபெறுமா? என்பது தொடர்பாக கல்வித்துறையினர் அறிவிக்கவில்லை. போக்குவரத்து வழமைபோன்று நடைபெறாவிட்டால் மாணவர்கள் எவ்வாறு பாடசாலைக்குச் செல்வது என்பது தொடர்பில் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரது கைபேசி இயங்கவில்லை. கல்வித் திணைக்கள அதிகாரிகள் எவரும் இது தொடர்பாகக் கருத்துக் கூற முன்வரவில்லை.

ஆயினும் இன்று கருத்துத் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாளை ஹர்த்தால் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். அதேநேரம், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடம் ஹர்த்தால் தொடர்பாக இருவேறு நிலைப்பாடுகள் இருப்பதை சமூக வலைத்தளப் பதிவுகளின் அவதானிக்க முடிகின்றது.

அரசியல் கட்சி முக்கியஸ்தர்களிடையே காணப்படும் யார் பெரியவர் என்ற போட்டியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!