யாழில் சாமியாடி வெளிநாட்டுக்கு வழி சொன்ன பெண் – நம்பிய இளைஞருக்கு 17 லட்சம் ரூபா நாமம்!

Yarl Naatham
கோப்புப் படம்

வெளிநாடு செல்லும் பலன் உள்ளது என்று சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபாவைக் கொடுத்தவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

வெளிநாடு செல்லும் ஆசையில் இருந்த ஒருவர், பல முகவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு எவர் மீதும் நம்பிக்கை வரவில்லை. தனது பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என்று அவர் அஞ்சியுள்ளார்.

என்ன செய்வது என்று தெரியாது விழித்துக் கொண்டிருந்த அவருக்கு உரும்பிராயில் உள்ள பெண் ஒருவர் சாமியாடி வாக்குச் சொல்வார் என்றும், அவர் சொல்வது அனைத்தும் நடக்கும் என்றும் கூறியிருக்கின்றனர். அதை நம்பி அங்கு சென்றிருக்கிறார் இந்த நபர்.

அங்கு பெண் ஒருவர் சாமியாடி வாக்குச் சொல்ல, அதைக் கேட்பதற்குப் பலர் கூடியிருந்துள்ளனர். இவரும் காத்திருந்து தனது பிரச்சினையைக் கூறியிருக்கின்றார்.

தனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்றும், ஆனால் பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என்ற அச்சமாகவிருக்கின்றது என்றும் கூறிய அவர், சிலரின் பெயர்களைக் கூறி அவர்கள் மூலம் முயற்சி செய்யவா என்று கேட்டிருக்கின்றார்.

சாமியாடி வாக்குச் சொன்ன பெண்ணும், கண்ணை மூடி ஏதோ மந்திரங்களைக் கூறி, ஒருவரின் பெயரைக் கூறியிருக்கின்றார். அவர் உன்னை வெளிநாடு அனுப்புவார், நீ வெளிநாடு செல்வது உறுதி என்று கூறி விபூதி அடித்து அனுப்பியிருக்கிறார்.

அதை நம்பிய இளைஞர் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு 17 லட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். காலங்கள் உருண்டனவே தவிர இளைஞர் வெளிநாடு செல்வதாக இல்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டவரும் சரியான பதிலை வழங்கவில்லை. ஒரு கட்டத்தில் சலித்துப் போன இளைஞர் பொலிஸாரை நாடியுள்ளார்.

பதுளையைச் சேர்ந்த அந்த நபரைப் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். இளைஞரின் பணம் தொடர்பில் அவரிடம் விசாரணை செய்தபோது, தனது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டது. அந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்டேன். அது தவிர எனக்கு எதுவும் தெரியாது என்று அந்த நபர் கையை விரிக்கின்றாராம்.

சாமியாடும் பெண்ணின் வாக்கை நம்பி பணத்தை இழந்தவர் தற்போது என்ன செய்வது என்று தெரியாது திண்டாடுகின்றார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு ஆசையால் பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. பொதுமக்கள் அது தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article
1 Comment
error: Content is protected !!