முல்லைத்தீவு, நீராவிபிட்டியில் இளம் பெண் ஒருவரின் சடலம் நிலையில் மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் கணவரால் கொன்று புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“மனைவிக்கும் எனக்கும் நடந்த சண்டையில் தாக்கினேன். அவர் இறந்துவிட்டது தெரிந்ததும் வீட்டுக்குப் பின்புறம் புதைத்துவிட்டேன்” என்று 23 வயதான கணவர் பொலிஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 23 வயதான கீதா என்ற பெண்ணும் அவரது 23 வயதுக் கணவரும் நீராவிபிட்டியில் உள்ள வாடகை வீட்டில் இருந்தனர்.
திருமணத்தின் பின்னர் சுமார் 3 வாரங்கள் அவர்கள் இந்த வீட்டில் தங்கியிருந்தனர். கீதா தினமும் தனது தாயாருடன் தொலைபேசியில் உரையாடும் நிலையில், கடந்த 21ஆம் திகதி முதல் கீதாவின் தொலைபேசி இயங்கவில்லை. அதையடுத்து தாய் கடந்த 23ஆம் திகதி நீராவிபிட்டியில் உள்ள வீட்டுக்கு மகளைத் தேடிச் சென்றிருக்கின்றார்.
அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை. மகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டைச் சுற்றித் தேடிய தாய் வீட்டின் பின்புறம் புதிதாக குழி ஒன்று மண்ணால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். மகள் காணாமல்போனது தொடர்பாக முல்லைத்தீவுப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் இருந்த குழி அகழப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் முன்னிலையில் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அந்தக் குழியில் இருந்து கீதாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. கீதாவின் கணவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மனைவியைக் கொலை செய்தமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
“எங்கள் இருவர் இடையே குடும்பச் சச்சரவுகள் தினவும் ஏற்படும். அன்றும் இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. இருவரும் தாக்கிக் கொண்டோம்.
நான் தாக்கியது மனைவியின் கழுத்தில் பட்டது. நிலத்தில் வீழ்ந்த அவள் நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை. தொட்டுப்பார்த்தேன், அவர் இறந்திருந்தாள்.
என்ன செய்வது என்று தெரியாது வீட்டின் பின்புறம் மலசலகூடத்துக்காக வெட்டியிருந்த குழியில் உடலைப் போட்டு மூடிவிட்டேன்” – என்று கணவர் பொலிஸ் விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கீதாவின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.சங்கீத் தலைமையிலான பொலிஸ் குழு, சந்தேகநபரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியது.
சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.