இன்னும் 25 நாள்களில் மாவீரர் வாரம் வரவுள்ள நிலையில் புலம்பெயர் தரப்புக்களால் வெளியிடப்படும் தகவல் ஒன்று மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தவர் ஒருவர் இம்முறை மாவீரர் தினக் குறிப்பொன்றை வெளியிடுவார் என்பதே புலம்பெயர்ந்த சில தமிழ்த் தரப்புகள் கூறும் தகவல்.
யார் இந்தத் தகவலை வெளியிடுவார் என்பதையோ? அந்தத் தகவல் ஒலி வடிவிலா? அல்லது காணொளி வடிவிலா? இருக்கும் என்பதையோ அந்தத் தரப்புக்கள் கூறவில்லை. அதனால் பரபரப்புக்காகக் கூறப்படும் தகவலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.
நவம்பர் மாதம் 27ஆம் திகதி வருடந்தோரும் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு இலங்கை அரசாங்கங்கள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தபோதும், தமிழ் மக்கள் மாவீரர் நாள் நினைவேந்தலை தடைகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்து வருகின்றனர்.
மாவீரர் நாள் நினைவேந்தலைத் தடுப்படுதற்கு அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பும் நீதிமன்றத் தடை கோரல், வழக்கு என்று பலவாறு முயற்சிப்பதால் நவம்பர் மாதத்தைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பரபரப்பான மாதம் என்றே கூறலாம்.
தற்போது புலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சிலவும் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. சிலவாரங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்பத்தினர் உயிருடன் இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது மாவீரர் நாள் குறிப்பொன்றை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தவர் ஒருவர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.