யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களைத் திருடித் தொடர்ச்சியாகச் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று (ஒக்ரோபர் 26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து சுன்னாகம் வரையான இடங்களில் – காங்கேசன்துறை வீதியில் நிறுத்தப்பட்ட அல்லது வீடுகளில் இருந்த மோட்டார் சைக்கிள்களை இலக்குவைத்தே சந்தேகநபர்கள் திருடியுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாம் திருடிய மோட்டார் சைக்கிள்களில் சென்று சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி ஆகிய இடங்களில் இவர்கள் சங்கிலித் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வயோதிபர்கள், பெண்களையே இவர்கள் இலக்குவைத்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபர்கள் இருவரை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என்றும் சங்குவேலி, உடுவிலைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாக உள்ளார் என்றும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.