யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக 34 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இந்த இளைஞர் தனது வீட்டின் கழிவறைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்ப்பாணம், உடுவிலில் தாயுடன் வசிக்கும் இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சகோதரர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
கழிவறைக்குச் சென்ற இவர் நீண்ட நேரம் வெளியே வராத நிலையில், சந்தேகமடைந்த தாய் அவரை அழைத்துள்ளார்.
உள்ளிருந்து பதில் வராத நிலையில் கதவை உடைத்துப் பார்த்தபோது இளைஞர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இளைஞரின் உடல் மீட்கப்பட்டு உடல் கூறாய்வுப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞரின் அதிக போதைப்பொருள் பாவனையே உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து மருந்து ஏற்றும் ஊசி உட்பட போதைப்பொருள் பாவனைக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த இறப்புச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதற்கு முன்னரும் பலர் அதிகளவு போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.