யாழ்ப்பாணம், கல்லுண்டாயில் நேற்று (ஒக்ரோபர் 26) இரவு நடந்த விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீரிமலையைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே உயிரிழந்தவராவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் தாமரைப் பூக்களைக் குளங்களில் பறித்து கடைகளுக்கு வழங்கும் தொழில் செய்பவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தனது சகோதரியின் வீட்டுக்கு சைக்கிளில் பயணித்த சுதர்சனும், கார் ஒன்றும் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சுதர்சன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து நேற்று இரவு 8 மணியளவில் நடந்த நிலையில், இன்று (ஒக்ரோபர் 27) காலை சுதர்சன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
விபத்துத் தொடர்பான விசாரணைகள் மானிப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது. காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, விபத்துக்குள்ளான சுதர்சனின் சைக்கிள் விபத்தின் பின்னர் இரவுவேளை வீதியில் கிடந்த நிலையில், ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அதில் மோதிக் காயங்களுக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.