அரச ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாகப் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால், அரச ஊழியர்களின் மேலகதிக நேரக் கொடுப்பனவுகள் இல்லாது போகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்துள்ள புதிய வேலை வாய்ப்புச் சட்ட வரைவின்படி, அரச ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு இடைவேளை உள்ளடங்கலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கான விசேட கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நாட்டின் பிரதான தொழிற்சங்களின் தலைவர்களின் பிரசன்னத்துடன் அலரி மாளிகையில் நடந்துள்ளது.
அங்கு நடந்த விவாதங்களின் அடிப்படையில் தனாயரிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய புதிய வேலை வாய்ப்புச் சட்ட வரைவு தொடர்பான முன்மொழிவை பிரதமர் தினேஷ் குணவர்த்தன அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளார்.
வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும் ஒரு அரச ஊழியருக்கு ஒன்ரறை நாள்கள் ஊதியத்துடனான விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று புதிய சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும் என்றும், 60 வயதுவரை சேவையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்ட ஊழியர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் புதிய சட்டவரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தால் எட்டு மணி நேர வேலை நேரத்துக்கு அப்பால் மேலதிகமாகப் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லாது போகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.