உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை – இந்தியா இடையே நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலங்கை அணி 55 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் இந்தப் படுதோல்வி பல்வேறு சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கிரிக்கெட் அணி ரசிகர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். படுமோசமாகச் செயற்படும் கிரிக்கெட் அணி இலங்கைக்குத் தேவையா என்று இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக் கிரிக்கெட் அணி மோசமான முறையில் செயற்பட்டு வருகின்றது. இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்விகள் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இன்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் மோசமான செயற்பாடு தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக் குழுவிடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம் கோரியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் பின்னடைவு, அங்கே தற்போது பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அமைப்பிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமையே, இலங்கை கிரிக்கெட் அணி பின்னடைவை சந்திப்பதற்கான பிரதான காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கிரிக்கெட்டிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படக் கூடாது என்ற வகையிலான கடிதமொன்று, ஐ.சி.சி.யினால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் எலடயிஸினால், இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வாவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.