யாழ்ப்பாணம், இணுவிலில் உள்ள வீடொன்றில் இருந்து 140 பவுண் நகைகள் நூதனமான முறையில் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
இணுவில், பாரதி வீதியில் உள்ள வீடொன்றில் இந்த மாதம் இரு மரணச் சடங்குகள் நடந்துள்ளன. இன்று அங்கு அந்தியேட்டிக் கிரியை நடைபெறவிருந்தது.
நேற்று இரவு வீட்டின் பின்புறம் சமையல் வேலைகள் நடைபெற்றுள்ளன. வீட்டில் இருந்தவர்களும் வீட்டின் பின்புறம் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்புறம் இருந்த கைபேசியைக் காணாது வீட்டில் இருந்தவர்கள் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த நகைகளும் திருடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு அந்த இடம் சல்லடையிடப்பட்டது. இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
வீட்டில் இருந்த சுமார் 140 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என்றும் கூறுப்படுகின்றது. வீட்டில் பாதுகாப்புக் கமரா இல்லாததால் எவ்வாறு திருட்டு நடந்துள்ளது என்பது புதிராகவே இருக்கின்றது.
அந்தியேட்டிக் கிரியைகள் முடிந்ததும் வீட்டில் பாதுகாப்புக் கமரா பொருத்தவும், வீட்டிலிருந்த நகைகளை வங்கிப் பெட்டகத்தில் வைக்கவும் எண்ணியிருந்தோம் என்று வீட்டில் உள்ளவர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.