உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக் கிரிக்கெட் அணி தொடர்ந்து அவமானகரமான தோல்விகளைச் சந்தித்த நிலையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் கலைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாகக் குழு நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய இடைக்காலக் குழுவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்காலக் குழு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டமை ஊடகங்கள் வாயிலாகவே ஜனாதிபதிக்குத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி, விளையாட்த்துறை அமைச்சரைத் தொடர்புகொள்ள பல முயன்றபோதும், தொடர்பை ஏற்படுத்த முடியில்லை என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறான நிறுவனங்களுக்கு இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்படும்போது ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில், 2022ஆம் ஆண்டு நடந்த ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் கடமைகள், பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.
அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.