அமைச்சரின் பதவியை பறிப்பேன்! – ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் சன்னதமாடும் ஜனாதிபதி ரணில்!

Yarl Naatham

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் பிரயோகிக்கின்றார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிர்வாகக் குழு தொடர்பான வர்த்தமானியைத் திரும்பப் பெறாதுவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சைத் தான் பொறுப்பேற்பேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி, உலகக் கிண்ணத் தொடர்பில் தொடர்ந்து அவமானகரமான தோல்விகளைச் சந்தித்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கலைக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சரால் புதிய இடைக்கால நிர்வாகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு அமைப்பது தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபித்திருந்தார். ஆயினும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களின் படியே இந்தக் குழு நியமிக்கப்பட்டது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் உள்ளன என்றும், அதனாலேயே கிரிக்கெட் அணியின் செயற்பாடுகள் மந்தமாகியுள்ளன என்றும் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட் சபையும் இது தொடர்பில் இலங்கைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இந்தநிலையில், இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு அவதானிப்பைப் பெற்றுள்ளது.

அதேநேரம், விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக் கால குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!