க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதத்தின் மூன்றாவது வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சில் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யகப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, தற்போது தாமதமாக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் கட்டம் கட்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டாகும்போது அந்த வருடத்துக்கான பரீட்சைகளை அதே வருடத்தில் நடத்தி முடிக்க அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி நிர்வாக சேவையில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைகளும் நிறைவடைந்துள்ளன.
விரைவாக நேர்முகத் தேர்வுகளை நடத்தி அவர்களுக்கான நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட கல்வி சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் அடுத்த வருடம் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நிரப்புவதற்கு அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.