யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணம் படைத்தவர்களிடம் நூதமான முறையில் பணத்தை ஏப்பமிடும் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணம் படைத்தவர்களை – குறிப்பாக பெரும் வர்த்தகர்களை – இலக்கு வைத்தே இந்த மோசடிகள் நடக்கின்றன என்று தெரியவருகின்றது.
தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளும் ஒருவர் தன்னை ஒரு மாந்திரீகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ‘எனது ஞான திருஷ்டியால் உங்களது தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரும் ஆபத்து நேர இருக்கின்றது, உங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கின்றது’ என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விடுவார்.
அதன்பின்னர் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் தொடரும். அழைப்பில் பேசுபவர் உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்கின்றது, இந்தப் பிரச்சினை இருக்கின்றது, செய்வினை சூனியம்தான் காரணம் என்று கூறக் கூற ஒரு கட்டத்தில் இவர்களும் தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கின்றது என்று நம்பியிருக்கின்றனர்.
அதன்பின்னர் ‘நான் நேரில் வருகின்றேன், செய்வினையை வெட்டலாம்’ என்று நம்பிக்கையளித்து செய்வினை வெட்டுவதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கின்றார். அதன்பின்னர் மாந்திரீகர் மாயமாகிவிட, அவர் நேரில் வருவார் என்று காத்திருந்து ஏமாந்து போயிருக்கின்றனர் இங்குள்ள பலர்.
இவ்வாறு பணத்தைப் பறிகொடுத்தவர்கள் அது தொடர்பாக முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் தற்போது கையைப் பிசைந்துகொண்டுள்ளனர். பணத்தைப் பறிகொடுத்தபின்னர் பதறுவதை விடவும், இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.