தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று (நவம்பர் 10) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
16 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் தற்போது நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பஷீர் வலி மொஹட்டைக் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி நடந்த குண்டுத் தாக்குதலில் 7 இராணுவத்தினர் உயிரிழந்தனர் என்றும், போதுமக்கள் 10 பேருக்குக் கடும் காயங்கள் ஏற்பட்டன என்றும் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கனகரத்தினம் ஆதித்தியன், யோகராசா நிரோஜன், சுப்ரமணியம் சுபேந்திரராஜா ஆகியோரே இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சட்டத்தரணி கனில் மத்துமககே ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்குத் தொடர்பான சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிபதி பிரதிவாதிகள் மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.