முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் மாணவர்களை பலவந்த ஓரினச் சேர்க்கையில் நீண்டகாலமாக ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கல்வி நிலையம் நடத்திவரும் கணிதபாட ஆசிரியரான இவர், தனியார் வகுப்புக்குவரும் மாணவர்களை பல ஆண்டுகளாக பலவந்த ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மாணவர் ஒருவர் பலவந்த ஓரினச் சேர்க்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், குறித்த மாணவர் முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரியால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பரிசோதனையில் அந்த மாணவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியான விசாரணைகளில் கடந்த ஓராண்டு காலப் பகுதியில் சுமார் ஆறு மாணவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அதையடுத்து சந்தேகநபரான ஆசிரியர் நெட்டாங்கண்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 13ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பாக சட்ட மருத்துவ பரிசோதனைகள், முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.