யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்! – 5 ஆண்டுகளின் பின்னர் பல ஆயிரம் ரூபா தண்டம்!

Yarl Naatham

சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு 5 ஆண்டு வழக்கின் பின்னர் 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம்.

ஆடியபாதம் வீதியில் உள்ள பிரபல அசைவ உணவகத்துக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு அப்போது திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகராகக் கடமையாற்றி தி.கிருபனால் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சுகாதாரச் சீர்கேட்டுடன் தொடர்புடைய பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, உணவகத்தின் உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.

அதையடுத்து வழக்கு நீதிமன்றில் தொடர் விசாரணைக்கு நியமிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக இன்று (நவம்பர் 15) தவணையிடப்பட்டிருந்தது.

வழக்குத் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டபோது, விசாரணைகளின் அடிப்படையில் உணவகத்தின் உரிமையாளர் குற்றவாளி என்று நீதிமன்று தீர்ப்பளித்தது. உணவக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்தது.

உணவக உரிமையாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா மன்றில் முன்னிலையாகியிருந்தார். வழக்குத் தொடுநர் சார்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ம.இராஜமேனன் மற்றும் சூ.குணசாந்தன் ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தினர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!