யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் ஆகியவற்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளான காங்கேசன்துறை வீதி மற்றும் இராமநாதன் வீதி ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவால் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் வண்ணார் பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபன் தலைமையிலான குழு இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தது.
சோதனை நடவடிக்கையில் மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. இந்த உணவு கையாளும் நிலையங்களுக்கு ஏற்கனவே சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும் சுகாதாரக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாததால் அவற்றுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு உணவு கையாளும் நிலையங்களிலும் காணப்படும் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரையில் அவற்றுக்கு சீல் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. வழக்கை எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.