வட்டுக்கோட்டைப் பொலிஸால் கைது செய்யப்பட்டு, கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவரின் உயிரிழப்புக்கு பொலிஸ் சித்திரவதையே காரணம் என்பது உடற் கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் சித்திரவதையால் உள்ளக இரத்தக் கசிவு ஏற்பட்டு சிறுநீரகம் பழுதடைந்தமையே உயிரிழப்புக்குக் காரணம் என்று உடற்கூற்றுச் சோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 24 வயது இளைஞன் சிறை அதிகாரிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
தங்களது மகனைக் கைது செய்த வட்டுக்கோட்டைப் பொலிஸார், அவரை 4 நாள்கள் தடுத்து வைத்திருத்து தாக்கினர் என்றும், அதனாலேயே அவர் உயிரிழந்தார் என்றும் அலேக்ஸின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்ட அலேக்ஸ் தன்னைப் பொலிஸார் கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்தனர் என்று கூறும் வீடியோ ஒன்றும் நேற்று வெளிவந்திருந்தது.
இன்று அலெக்ஸ்ன் உடல் கூறாய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது உயிரிழப்பு தாக்குதல் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளைஞன் கைது
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 25 வயது இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.
பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள்.
பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை எனத் தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பெற்றோர் குற்றச்சாட்டு
உயிரிழந்த இளைஞனை கடந்த 8ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்றுள்ளார்.
பொலிஸ் நிலையம் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் மறுநாள் 9ஆம் திகதி பொலிஸ் நிலையம் சென்று விசாரித்தபோது , பொலிஸார் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.
பின்னர் 10ஆம் திகதியும் நாம் அவர்களை தேடி பொலிஸ் நிலையம் சென்ற போது உயிரிழந்த அலெக்ஸ்சின் கதறல் சத்தம் எமக்கு கேட்டது. நாம் அவரை காட்டுங்கள் என்று கேட்டபோது பொலிஸார் எம்மை மிரட்டி அனுப்பினார்.
அதனை அடுத்து நாம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம். இரண்டு நாள்களின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியல்
கடந்த 10ஆம் திகதி அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியாக சென்ற அவரது நண்பர் மீது , வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது, அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலையே இருந்தனர் என உறவினர்கள் தெரிவித்தனர்.
உயிரிழப்பு
நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவர்களை தடுத்து வைத்திருந்த போது, அலெக்ஸ்சின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து சிறைச்சாலை நிர்வாகத்தால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
பொலிஸ் விசாரணை
சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம்
இந்தச் சம்பவத்தை அடுத்து வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் இன்று தெரிவித்தன.
இறுதி வீடியோ வாக்குமூலம் : 🎥 இங்கே கிளிக் செய்யுங்கள்