முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இன்றும் ஐந்து மனித எலும்பு எச்சங்கள் மற்றும் துப்பாக்கி சன்னங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.
அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றுமுன்தினம் இரு மனித உடல்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஐந்து மனித உடல்களின் எலும்பு எச்சங்களும், துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் முதற்கட்ட அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை நடைபெற்றன.
அப்போது 17 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டன. துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய இலக்க தகடு, உடைகள் போன்ற சான்றுப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன