அலெக்ஸ் மரணம்: இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய யாழ். நீதிமன்றம் உத்தரவு

Yarl Naatham

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில், 2 பொலிஸாரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றில் 5 சாட்சியங்கள் வழங்கப்பட்டன. அலெக்ஸூடன் கைது செய்யப்பட்ட இளைஞரும் வாக்குமூலமளித்தார்.

உயிரிந்த இளைஞருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞர் பெயர் குறிப்பிடும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாட்சியால் விபரமாகக் கூறப்பட்ட மூன்று பொலிஸாரின் அங்க அடையாளத்தை வைத்து மூவர் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்று உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள யாழ்நாதம் 🔗 Youtube Channel லை 🔗 Subscribe செய்யுங்கள்.

அலெக்ஸூடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞர் வழங்கிய வாக்குமூலத்தில் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே வேறிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து, அந்த இடங்களில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சாட்சியமளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தங்களது விசாரணையில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், சாட்சியின் அடையாளத்தைக் கொண்டு மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இளைஞனின் குடும்பத்தினர் சார்பாக 31 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி

வட்டுக்கோட்டை, வழக்கம்பரையில் வீடொன்றில் இருந்து 16 அரைப் பவுண் நகைகளும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை சித்தன்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய அலெக்ஸ் என்ற இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்ற அவரும், அவரது நண்பரும் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கட்டுக்காவலில் வைக்கப்பட்ட அலெக்ஸ் உடல் நலக் குறைவால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

உடற் கூறாய்வு அறிக்கையில், அலெக்ஸ் தாக்கப்பட்டமையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே அலெக்ஸின் உயிரிழப்புக்குக் காரணம் என்று அறிக்கையிடப்பட்டிருந்தது.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் 4 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று அலெக்ஸின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள யாழ்நாதம் 🔗 Youtube Channel லை 🔗 Subscribe செய்யுங்கள்.

மருத்துவமனையில் சிகிக்சைக்காகச் சேர்க்கப்பட்டபோது, அலெக்ஸ் உரையாடிய வீடியோப் பதிவொன்றும் வெளியாகியிருந்தது. அதில் பொலிஸார் தன்னைக் கடுமையாகத் தாக்கிச் சித்திரவதைக்கு உள்ளாக்கினர் என்று தெரிவித்திருந்தார்.

அலெக்ஸூம், நண்பரும் கைது செய்யப்பட்ட நகைத் திருட்டுத் தொடர்பான வழக்கு நேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அலெக்ஸூன் கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதித்தது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!