முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் இன்றும் (நவம்பர் 23) ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் நான்காம் நாளான இன்று 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் பகுதியளவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சன்னங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய இலக்கத்தகடுகள் என்பனவும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நான்காம் நாளான இன்று அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நடைபெற்றன.
அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றன. தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினர் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 26 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
நாளை விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் மனித புதைகுழியை வரையறுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் புதைகுழி எவ்வளவு தூரத்துக்கு வியாபித்துள்ளது. எத்தனை அடுக்குகளில் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பன போன்ற தகவல்களை இந்த ஸ்கான் இயந்திரம் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா தெரிவித்துள்ளார்.