அதி உயர் மின்மார்க்க இணைப்புக்கு அருகில் – 5 அடிக்குள் நெருங்குபவர்கள் மின் இணைப்பைப் தொடாமலேயே மின் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். சாவகச்சேரியில் இன்று (28) இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் இதுவே நடந்துள்ளது என்று அறிய முடிகின்றது.
அதியுயர் மின் மார்க்கத்தில் இருந்து 7 அடிக்கு அப்பால் கட்டடங்கள் அமைய வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதும், சம்பவம் நடந்த கட்டடம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இன்று சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 26 வயதான நித்தியானந்தன் கஜலக்சன் என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் நுணாவிலைச் சேர்ந்தவராவார்.
நிதி நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் மின் மோட்டார் பழுதடைந்தது. அதைச் சரி செய்து அது இயங்கத் தொடங்கியதும் கஜலக்சன் தண்ணீர் தொட்டியில் நீரின் அளவைப் பார்க்கச் சென்றிருக்கின்றார்.
தண்ணீர் தொட்டியில் இருந்து சுமார் 2 அடி தூரத்தில் உயர் மின் மார்க்க இணைப்புச் செல்கின்றது. தண்ணீர் தொட்டியை நெருங்கிய கஜலக்சன் மின் அதிர்ச்சிக்கு இலக்காகித் தூக்கி வீசப்பட்டார். அவரது தலை அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்றில் மோதுண்டது என்று சம்பவத்தில் நின்றவர்கள் கூறுகின்றனர்.
சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கஜலக்சன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இளைஞனின் உயிர் பறிபோயிருக்காது என்று துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாகப் பொலிஸாரும் கவனம் செலுத்தியுள்ளனர்.