கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் தற்போது 6 அங்குல அளவில் வான் பாய்கின்றது.
இன்று இரவு 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கனகாம்பிகை குளத்தில் நீரேந்து பிரதேசத்தில் கிடைக்குமாக இருந்தால் அதிகளவான நீர் வெளியேறக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது.
இந்த நீர் கிளிநொச்சி குளத்தை வந்தடைந்து கிளிநொச்சி குளம் வான் பாய்ந்தால் பரந்தன் மற்றும் உமையாள்புரம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது.
மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
————————
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் எதிர்வரும் 5ஆம் திகதிவரை கன மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது பெரும்பாலான குளங்கள் வான்பாயும் நிலையில் உள்ளதால், தற்போது கிடைக்கும் மழையால் வெள்ள நிலைமை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது. தாழ் நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மையம் தற்போது திருகோணமலைக்குக் கிழக்காக 477 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுகின்றது. அது மேற்கு – வடமேற்குத் திசைநோக்கி நகர்கின்றது.
மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அத்துடன், தமிழ்நாட்டின் கிழக்கு கரையோர மாவட்டங்களிலும் அதனை அண்டிய உள் தமிழக மாவட்டங்களிலும் பரவலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது.