இணையம் ஊடாக பணம் உழைக்கலாம் என்று ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் சுமார் பல லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் தற்போது பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.
இணையத்தின் ஊடாகப் பணம் உழைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரங்களை நம்பியே இவர்கள் பணத்தை இழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விளம்பரத்தை நம்பி 30 லட்சம் ரூபா, 16 லட்சம் ரூபா என அவர்கள் இழந்துள்ளனர்.
விளம்பரம் மூலம் தொடர்பு கொள்வோர், சிறு தொகையை முதலீடு செய்யக் கூறுவார்கள். அந்தத் தொகையை அனுப்பியதும் ஒரு சிறிய வேலை (டாஸ்க்) ஒன்று கொடுக்கப்படும். அதைச் செய்ததும் அவர்கள் வைப்பிலிட்ட பணத்தை விடவும் அதிக பணம் மீண்டும் வழங்கப்படும்.
இது சிறிதுகாலம் தொடர, இதன்மூலம் பணம் ஈட்டலாம் என்ற நம்பிக்கை ஏற்படும்போது, மெல்ல மெல்ல பெரிய தொகைகளை முதலீடக் கூறுவார்கள்.
பணத்தை மீளப் பெறலாம் என்ற நம்பிக்கையில் இங்குள்ளவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்யும்போது, பணத்தைச் சுருட்டிக்கொண்டு அவர்கள் காணாமல் போகின்றனர். யாழ். மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்ததாவது-
இவ்வாறான மோசடிகள் தற்போது அதிகம் நடக்கின்றன. மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமே மக்களைக் குறிவைக்கின்றனர். இந்த மோசடிகளில் சிக்கிப் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் – என்றார்.