யாழ்ப்பாணம் பல்கலைக் கழக கலைப்பீட மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது யுவதியே உயிரிழந்தவராவார். கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி நேற்று இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
டெங்குத் தொற்றால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றபோதும், மருத்துவமனை வட்டாரங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்று தீவிரமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை டெங்குத் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.
டெங்குத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக புதிதாக இரு விடுதிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்பட்டுள்ளன.
கடந்தகாலங்களில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அக்கறை காட்டாது, தற்போது தொற்றுத் தீவிரமடைந்துள்ள நிலையில் – அதிலும் மழை ஆரம்பித்துள்ள நிலையில் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்படும் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியடைந்த நடவடிக்கைகளாவே மக்களால் நோக்கப்படுகின்றன.