இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி பதிவு இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயம் என்று உள்நாட்டு இறை வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வரி செலுத்துவோர் பதிவு எண்ணை வைத்திருக்காவிட்டால் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படும் என்றும் இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பதிவு நடவடிக்கையை உள்நாட்டு இறை வரித் திணைக்களத்துக்குச் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பதிவு செய்துக்கொள்ளாதவர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பதிவு செய்யும் எனவும் இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, வரி இலக்கத்தை பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் மட்டுமே வரி விதிக்கப்படும் நபராக மாறுகிறார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் நடப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.