இலங்கை மின்சார சபையின் பணியாளர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர.
இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாகப் பிரிப்பது தொடர்பான சட்டவரைவுக்கு எதிர்பபுத் தெரிவித்து கடந்த 3 நாள்களாக மின்சார சபைப் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே, அமைச்சர் கஞ்சன அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மின்சார சபையின் சேவைகளைச் சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள உத்தேச சட்டவரைவு தேசிய வளங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
மின்சார சபையை மறுசீரமைப்பது என்ற போர்வையில் அரசாங்கம், இலங்கை மின்சார சபைச் சட்டத்தைப் பயன்படுத்தி தேசிய வளங்களை விற்பனை செய்கின்றது என்று குற்றஞசாட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த மூன்று நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் அரசாங்கம் அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இதுவரை செல்லவில்லை.
23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு “திமிர்பிடித்த அரசாங்கம்” குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பைக்கூட வழங்கவில்லை என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்சார சபை ஊழியர்களின் வைத்திய விடுமுறை, போனஸ் என்பவற்றை இரண்டாண்டுகளாகக் கொள்ளையடித்த ஆட்சியாளர்கள், கடைசியில், இரத்தத்திலும், கண்ணீரிலும், வியர்வையிலும் சேர்க்கப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியையும், ஓய்வூதிய நிதியையும் கொள்ளையடிக்க இந்தச் சட்டவரைவைக் கொண்டுவந்துள்ளனர் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான பின்னணியை உருவாக்கி, நாட்டை இருளில் மூழ்கடித்துவிட்டு, தொழிற்சங்கங்கள் மீது பழியைப் போட அரசாங்கம் காத்திருக்கின்றது என்றும், நாட்டு மக்களைப் பற்றி அரசாங்கம் பொருட்படுத்துவதில்லை என்றும் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர, “நாட்டை இருளில் தள்ளத் தயாரில்லை, ஆனால், ஊழியர்களால் அதிகபட்சமாக செய்ய முடிந்ததை செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
“ஊழியர்களின் பணிகளை கைவிடுவதே நாங்கள் அதிபட்சமாக செய்யக்கூடிய விடயம். நாங்கள் எந்த விளக்குகளையும் அணைக்கவில்லை. சாவிகளை ஒப்படைத்துவிட்டு வருவோம், முடிந்தால் இந்த பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாமல் இந்த நிறுவனத்தை நடத்துங்கள்” என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரை நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்றே கருதப்படுகின்றது.