18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரின் (TIN) இலக்கம் வழங்குவதற்கான செயற்பாடுகளை உடனடியாக இலகுபடுத்தவும், விரிவுபடுத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து பிரதேச செயலகங்களும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கென தனி பிரிவு ஒன்றை திறப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யவும் பொது நிர்வாக அமைச்சுக்கு பணிப்புரை விடுத்த அமைச்சர், இது தவிர அரசாங்க வங்கிகள், ஆட்கள் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து போன்ற இடங்களில் தனிப்பிரிவுகளைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
TIN வழங்குவதை வினைத்திறனாக்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
எரிபொருளைப் பெறுவது தொடர்பான QR குறியீடுகளை வழங்குவதில் முன்னர் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று இங்கும் திறமையான செயல்முறை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஒன்லைன் பதிவு விண்ணப்பப்படிவத்தை சுருக்கி, TIN இலக்கத்தைப் பெற எடுக்கும் நேரத்தை சுமார் ஐந்து நாள்களாகக் குறைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மற்றும் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TIN இலக்கத்தைப் பெற கீழ்காணும் லிங்கின் ஊடாக பதிவுசெய்துகொள்ளலாம்.
https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader