யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில் டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான பல இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார பரிசோதகரால் களப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் பல இடங்களில் டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டன என்றும் அறியமுடிகின்றது.
இது தொடர்பாக சுகாதாரப் பரிசோதகர்கள் மாவட்டச் செயலக நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளதுடன், மாவட்டச் செயலக வளாகத்தைச் சுத்தப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்றுத் தீவிரமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் டெங்குத் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில உயிரிழப்புக்களும் அண்மைய நாள்களில் பதிவாகியிருந்தன.
கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அரச திணைக்களங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், தனியார் நிறுவன வளாகங்களை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், டெங்கு பரவும் ஏதுநிலைகளைக் கொண்ட குடியிருப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலைமையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாக கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான இடங்களை இனங்கண்டிருந்தனர்.
இவை மக்கள் மத்தியில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அதிகாரிகள் அறிக்கையளவில் மட்டும் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி மக்களால் முன்வைக்கப்படுகின்றது.